13 June 2008

கணினி வைரஸை தடுக்க புதிய வழி

2001-ம் ஆண்டு கோட் ரெட் என்ற வைரஸ் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளை 14 மணி நேரத்தில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது. தவிரவும் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு உலகம் முழுதும் இழப்பை ஏற்படுத்தியது.

தற்போது ஓஹியோ மாகாண தொழில் நுட்ப வல்லுனர்கள் கோட் ரெட் வகை வைரஸ்களை தடுக்க புதிய உத்திகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரசை அதன் துவக்க இயக்கத்திலேயே கண்டுபிடித்து விடுவது, அது பல நெட்வொர்க்குகளுக்கு செல்வதற்கு முன்னரே கண்டுபிடித்து விடுவது என்பதே அந்த உத்திகள்.

இந்த வைரஸ்கள் மிக வேகமாக பரவக்கூடியது. ஜன்க் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நெட்வொர்க்கில் இவை வந்து குவியும் தன்மையுடையது. மேலும் கணினி நெட்வொர்க்கை நிரப்பி அதனை ஷட் டவுனும் செய்து விடும் ஆபத்து மிக்கவை இந்த வைரஸ்.

நெட்வொர்க்குகளில் உள்ள கணினியிலிருந்து எவ்வளவு எண்ணிக்கை ஸ்கேன்கள் வெளியில் செல்கின்றன என்பதை கண்காணிக்கும் மென்பொருளை ஓஹியோ பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு கணினி அளவுக்கதிகமாக ஸ்கேன்களை வெளியே அனுப்பினால் அந்த கண்னி வைரஸ் தாக்குதல் கண்டுள்ளது என்று அடையாளம் காணப்படும். உடனடியாக கணினி நிர்வாகிகள் அதனை ஆஃப் லைனிற்கு எடுத்துச் சென்று வைரசை கண்காணிக்கலாம்.

கூகிளில் நாம் தேடுதல் போல்தான் இந்த ஸ்கேனை கண்டுபிடிக்கும் முறையும் என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

வித்தியாசம் என்னவெனில் ஒரு வைரஸ் தாக்கிய கணினியிலிருந்து குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான ஸ்கேன்கள் வெளியேறும். ஆனால் எவ்வளவு ஸ்கேன்கள் என்ற அளவை தீர்மானிப்பது கடினம்.

இதற்காக கணித மாதிரிகளையும் ஓஹியோ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு நேரத்தில் எவ்வளவு ஸ்கேன்கள் செல்லலாம் என்பதை இது வரையறுத்து விடும்.

இதுவரை வந்துள்ள வைரஸ் ஒழிப்பு தொழில் நுட்பங்களை விட இது திறம்பட வேலை செய்யும் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 comments: