6 July 2008

'எங்கே தேடுவேன்?'

அது ஒரு தேசத்தின் தலைநகரம்.அங்கே ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்தது. வரிசையாகப் பல ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. கண்காட்சியின் ஒரு பகுதியில், கொஞ்சம் வித்தியாசமான ஓவியங்கள் இரண்டு அருகருகே தொங்கின.


வேறொரு தேசத்தில் இருந்து வந்திருந்த பெரிய மனிதர் ஒருவர் அந்த ஓவியங்களைப் பார்த்தார்.

அதில் ஓர் ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தார்.

‘‘இது யார்?’’

‘‘இவர்தான் கோரோசோவ்!’’

பெரிய மனிதருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘‘கோரோசோவ்... வா... அப்படின்னா?’’

‘‘இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா... இதுவரை கேள்விப்பட்டதில்லையா?’’ ‘‘இல்லையே...!’’

‘‘இவர் ஒரு பெரிய மேதை!’’

‘‘அப்படியா...?’’

‘‘ஆமாம்... நீராவி எந்திரம், ரயில் இன்ஜின், ரேடியோ, விமானம் எல்லாம் கண்டுபிடித்தவர் இந்த கோரோசோவ்!’’

‘‘ஓ... அப்படியா? சரி... அடுத்த படத்தில் இருப்பவர்?’’ & பெரிய மனிதர் கேட்டார்.

‘‘மஞ்சு கௌங்கி!’’

‘‘இவரது பெருமை என்னவோ?’’

‘‘கோரோசோவைக் கற்பனை செய்து படைத்தவரே இவர்தான்!’’ கேட்டவர் குழம்பிப் போய் வெளியே வந்து விட்டார்.


நண்பர்களே... நம் பெரியவர்கள் ஆண்டவனையும் இப்படித்தான் நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். ஓர் உருவத்தைக் காட்டி, ‘இவர்தான் கடவுள். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தவர் இவரே!’ என்கிறார்கள்.
‘சரி! இவரைப் படைத்தவர் யார்?’ என்று ஒரு கணம் யோசித்தால், அவர் ஒரு சிற்பியாக இருப்பார் அல்லது ஓவியராக இருப்பார். சரி... அப்படியானால் கடவுளை எப்படிப் பார்ப்பது? எங்கே பார்ப்பது?


இந்தக் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் தெளிவாக பதில் சொல்கிறார்:

‘‘ஆலயத்தில் உள்ள சிலைகளில் கடவுளைப் பார்ப்பவன் பக்தியின் அடிமட்டத்திலேயே நிற்கிறான். அடுத்தவரது துன்பத்தைப் போக்குவதில் கடவுளைப் பார்ப்பவன், ஆகாயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறான்!’’


நன்றி, விகடன்.

0 comments: